நேரத்தை கடத்திய கிரௌலி; பொறுமையை இழந்த இந்திய அணி - மைதானத்தில் சலசலப்பு!
Zak Crawley - Shubman Gill Controversy: இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸாக் கிரௌலியும் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியும் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானதுடன் ஸ்கோரையும் சமன்செய்தது.
இதனால் முன்னிலை ஏதுமின்றி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஸாக் கிரௌலி 2 ரன்களுடனும், பென் டக்கெட் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இதையடுத்து இரண்டு ரன்கள் முன்னிலையுடன் நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் இரு அணி வீரர்களும் வார்த்தை மோதலில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய போது மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைய 6 நிமிடங்கள் மட்டுமே இருந்தது. அப்போது இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ர ஓவரை வீசிய நிலையில் இங்கிலாந்து பேட்டர் ஸாக் கிரௌலி அந்த ஓவரை எதிர்கொண்டார். இதில் ஓவரின் மூன்றாவது பந்தை பும்ரா வீச வந்த நிலையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஸாக் கிரௌலி வேண்டுமென்றே பந்தை எதிர்கொள்வதை தவிர்த்து ஸ்டிரைக்கில் இருந்து விலகினார்.
இதனால் அதிருப்தியடைந்த இந்திய அணி வீரர்கள் நடுவரிடம் முறையிட்டனர். இதில் ஷுப்மன் கில் ஒருபடி மேல் சென்று ஸாக் கிரௌலியும் மோசமான வார்த்தைகளைக் கூறி வசைப்பாடினார். இதனால் இரு அணி வீரர்கள் இடையேயும் வாக்குவாதம் மூறியது. அதன்பின் கிரௌலி மீண்டும் பேட்டிங் செய்த போது ஓவரின் 5ஆவது பந்தை அவர் தடுத்து விளையாட முயற்சித்த நிலையில், அந்த பந்து அவரது கை விரல்களை பதம் பார்த்தது. இதனால் கிரௌலி வலியுடனும் கணப்பட்டர்.
மேலும் அவர் முதலுதவிக்காக அணி மருத்துவரையும் மைதானத்திற்குள் அழைத்தார். அப்போது ஷுப்மன் உள்பட அனைத்து இந்திய வீரர்கள் ஒன்று சேர்ந்து கிரௌலியை ஏளனம் செய்யும் விதமாக கைத்தட்டி சில வார்த்தைகளை கூறினார். அந்த சமயத்திலும் ஷுப்மன் கில் நேரடியாக ஸாக் கிரௌலியின் அருகே சென்று அவருக்கு பதிலாக இம்பேக்ட் வீரர் வேண்டும் என்பது போலும், அவரை வசைபாடும் விதமாக சில சைகைகளையும் செய்தார்.
இதனால் கோபமடைந்த கிரௌலியும் சில வார்த்தைகளை கூற மீண்டும் வீரர்கள் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கெட்டும் ஷுப்மன் கில்லிடம் பேச மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின் அந்த ஓவர் முடிந்த கையோடு இங்கிலாந்து வீரர்கள் பெவிலியன் திரும்பினர். இப்படி இரு அணி வீரர்களும் களத்தில் நேருக்கு நேர் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவர் கிரிக்கெட் அரங்கில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளதுடன், இதுகுறித்த காணொளிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.