ஐபிஎல் 2024: எதிரணி பந்துவீச்சாளர்களை பாராட்டிய சஞ்சு சாம்சன்!
ஹைதராபாதில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ராஜஸ்தான் அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்.
இதில் அபிஷேக் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய அன்மோல்பிரீத் சிங் 5 ரன்களில் ஆட்டமிழக்க சன்ரைசர்ஸ் அணி 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின், டிராவிஸ் ஹெட் மற்றும் நிதீஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியதுடன், இருவரும ரைசதம் கடந்தும் அசத்தினர். பின் டிராவிஸ் ஹெட் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உள்பட 58 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசெனும் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசி 42 ரன்களையும், மறுபக்கம் நிதீஷ் ரெட்டி 3 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களை விளாசி 76 ரன்களையும் குவித்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த யஷாஸ்வி ஜெய்ஸ்வால் - ரியான் பராக் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அதன்பின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 67 ரன்களையும், ரியான் பராக் 77 ரன்களையும் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இருப்பினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வலுவான நிலையில் இருந்ததால் எளிதாக இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிலும் குறிப்பாக கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோவ்மன் பாவெல் தனது விக்கெட்டை இழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், “இந்த சீசனில் நாங்கள் சில நெருக்கமான போட்டிகளை சந்தித்துள்ளோம். அதில் சில போட்டிகளில் நாங்கள் வெற்றிபெற்றாலும், ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவினோம். இப்போட்டியில் கடைசி வரை போராடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத அணி பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த போட்டியில் நாங்கள் செய்த தவறுகள் என்பது மிக சிறியது. டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை கடைசி பந்து வீசும் வரை போட்டியின் வெற்றி குறித்து முடிவு செய்ய முடியாது. புதிய பந்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. ஆனால் ஆட்டம் செல்ல செல்ல பந்து பேட்டிற்கு வந்தது. இந்த போட்டியில் நான் மற்றும் பட்லர் ஆகியோர் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த போதும் ஆட்டத்தை இறுதிவரை அழைத்துச் செல்ல உதவிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோருக்கு பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.