ஐபிஎல் தொடரில் விளையாடுவது வீரர்களின் முடிவே - கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ நேற்றைய தினம் அறிவித்தது. புதிய அட்டவணையின் படி பிளே ஆஃப் போட்டிகள் 29ஆம் தேதி முதலும், இறுதிப்போட்டி ஜூன் 3ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டிகள் பெங்களூரு, டெல்லி, லக்னோ, அஹ்மதாபாத், மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆஸ்திரேலிய வீரர்கள் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட இந்தியா திரும்புவார்களா இல்லையா என்பது ரசிகர்களின் மத்தில் பெரும் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாட விரும்பினால், அவர்கள் இதற்காக இந்தியா திரும்பலாம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், “இந்தியாவுக்குத் திரும்ப விரும்புகிறீர்களா இல்லையா என்பது குறித்து வீரர்கள் எடுக்கும் தனிப்பட்ட முடிவில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆதரவளிக்கும். மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தேர்வுசெய்யும் வீரர்களுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தயாராகும் பணியில் அணி நிர்வாகம் ஈடுபடும். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆஸ்திரேலிய அரசு மற்றும் பிசிசிஐயுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் 2025 இல் ஆஸ்திரேலியாவிலிருந்து மொத்தம் 15 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் இத்தொடரில் மீண்டும் விளையாடுவார்கள் என்பதில் எந்த உறுதியும் இல்லை.
Also Read: LIVE Cricket Score
இவர்களைத் தவிர, மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் மார்ஷ், மிட்செல் ஓவன், சேவியர் பார்ட்லெட், ஆரோன் ஹார்டி, நாதன் எல்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல் (காயம் காரணமாக வெளியேறினார்) மற்றும் ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் போன்ற ஆஸ்திரேலிய வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடினர். இதில் எந்தெந்தெ வீரர்கள் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார்கள் என்படும் தற்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை.