எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை; வாய்ப்பு கிடைத்திருந்தால் நானும் ஒரு வாட்சன் தான் - விஜய் சங்கர்

Updated: Tue, May 18 2021 15:08 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக விளையாடியவர் விஜய் சங்கர். இவரை 3டி பிளேயர் என்றும் ஒரு காலத்தில் அழைப்பதுண்டு. ஏனெனில் அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்ததன் காரணமாக அவருக்கு இப்பெயரை பிசிசிஐயே வழங்கியது. 

ஆனால்  அவர், அத்தொடரில் சரியாக விளையாடாத காரணத்தினால் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதற்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவே இல்லை. அதைப் பற்றி பேசிய விஜய் சங்கர், எனக்கு இந்திய அணியில் ஒரு நிரந்தரமான பேட்டிங் வரிசை கிடைக்கவில்லை. நான் எப்போது களமிறங்கப் போகிறேன் என்று எனக்கே தெரியாது. அதெல்லாம், நான் விளையாடிய போட்டிகள் எந்த வகையில் செல்கிறது என்பதைப் பொறுத்தே அமைந்தது. 

இப்படி ஒரு நிலையான பேட்டிங் ஆர்டர் கிடைக்காத காரணத்தினால் தான் என்னுடைய திறமைகளை வெளிக்காட்ட முடியாமல் போனது என்று கூறிய விஜய் சங்கர், தன்னை உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களாக விளங்கிய தென் ஆப்ரிக்காவின் ஜாக்கியூஸ் கலீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனுடன் ஒப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள விஜய் சங்கர், “உலக கோப்பை தொடரில், இந்திய அணியில் அம்பத்தி ராயுடு தேர்வாகாமல் போனதிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை 3D பிளேயர் என்று இந்திய தேர்வுக் குழு கூறியதால், அம்பத்தி ராயுடு அது சம்பந்தமாக ஒரு ட்வீட்டை அப்போது பதிவு செய்தார். அந்த ட்வீட்டில் கருத்து தெரிவித்த ரசிகர்கள் அனைவரும் என்னை டேக் செய்ததால், தொடர்ச்சியாக நான் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

நானும் ஷேன் வாட்சன் மற்றும் கலீஸ் போன்ற ஒரு ஆல்ரவுண்டர்களில் ஒருவன்தான். ஆனால் அவர்கள் தங்களுடைய நாட்டிற்காக விளையாடும்போது, மூன்று அல்லது நான்காவது இடங்களில் தொடர்ச்சியாக களமிறங்கினர். எனவே தான் அவர்களால் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களாக மாற முடிந்தது. ஆனால் எனக்கோ அப்படி ஒரு நிலமை வாய்க்கவில்லை. ஆறாவது அல்லது ஏழாவது இடங்களில் நான் இறக்கி விடப்பட்டேன். சில போட்டிகளில் டாப் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பும் எனக்கு வழங்கப்பட்டது. அந்த போட்டிகள் எல்லாவற்றிலும் நான் சிறப்பாக செயல்பட்டுள்ளேன்.

மேலும் என்னை அம்பத்தி ராயுடுவுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர், அது அபத்தமான ஒன்றாகத்தான் இருக்கிறது. அம்பத்தி ராயுடு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார். நான் லோயர் ஆர்டரில் விளையாடுகிறேன். இப்படி இருக்கும்போது என்னை எப்படி அம்பத்தி ராயுடுவுடன் ஒப்பிட முடியும்” என்று தமது ஆதங்கத்தை வெளிக்காட்டியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை