இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பந்து வீச்சாளர் யார்? என்பதை அறிவிக்க பிரபல விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனம் ஒரு போட்டி நடத்தியது.
இந்த போட்டியில் விவிஎஸ் லட்சுமண், இர்ஃபான் பதான், இயன் பிஷப், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், ஸ்காட் ஸ்டைரிஸ், கவுதம் காம்பிர், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள், விளையாட்டு பத்திரிகையாளர்கள் என 50 பேர் வாக்களித்து சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்தனர்.
இவர்கள் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை 21ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும், இலங்கை சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரனை சிறந்த பந்து வீச்சாளர்களாகவும் தேர்வு செய்துள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஸ்டெயின் 2ஆவது இடத்தையும், ஷேன் வார்னே 3ஆவது இடத்தையும், மெக்ராத் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
சச்சின் தெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் 51 சதம், 68 அரைசதங்களுடன் 15,921 ரன்கள் அடித்துள்ளார். 463 ஒருநாள் போட்டிகளில் 49 சதம், 96 அரைசதங்களுடன் 18,426 ரன்கள் அடித்துள்ளார். முத்தையா முரளீதரன் 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.