இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட அணியாக சிஎஸ்கே - ஆய்வு தகவல்!
ஆர்மெக்ஸ் மீடியா என்கிற நிறுவனம், இந்தியாவிலுள்ள உள்ள பல்வேறு நகரங்களில் ஆய்வு நடத்தி எந்த விளையாட்டுக்கு அதிக வரவேற்பு உள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது. கடந்த வருடம் ஜூலை முதல் டிசம்பர் வரை இந்தியாவின் நகரங்களிலும், சிற்றூர்களிலும் 12,000 பேரிடம் ஆய்வு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியாவில் 13.63 கோடி விளையாட்டு ரசிகர்கள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. எவர் ஒருவர் தொலைக்காட்சியிலோ அல்லது ஓடிடியிலோ ஒரு மாதத்துக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது நேரலை விளையாட்டைப் பார்த்து ரசிக்கிறாரோ அவரை விளையாட்டு ரசிகராகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த ஆய்வின் முடிவில் இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு 12.42 கோடி ரசிகர்கள் உள்ளார்கள் என்றும் அதில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4.09 கோடி ரசிகர்கள் உள்ளார்கள் என்றும் முடிவு தெரிவிக்கிறது.
முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2.25 கோடி ரசிகர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் அது இரு மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.