சாம்பியன்ஸ் கோப்பை 2025: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற வாழ்வா சாவா லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன்கள் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இப்ராஹிமுடன் ஜோடி சேர்ந்த செதிகுல்லா அடல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 22 ரன்களைச் சேர்த்த நிலையில் இப்ராஹிம் ஸத்ரான் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரஹ்மத் ஷாவும் 12 ரன்கள் மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் செதிகுல்லா அடல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
பின்னர் அடலுடன் இணைந்த கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி நிதானமாக விளையாட இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 68 ரன்களை எட்டியது. அதன்பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட செதிகுல்லா அடல் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 85 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஹஸ்மதுல்லா ஷாஹிதி 20 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய முகமது நபி ஒரு ரன்னிலும், குல்பதின் நைப் 4 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ரஷித் கானும் தனது பங்கிற்கு 19 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபக்கம் அபாரமாக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட்ட அஸ்மதுல்லா ஒமர்ஸாய் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், ஒரு பவுண்டரி மற்றும் 5 சிக்சர்களுடன் 67 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் மேத்யூ ஷார்ட் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களைச் சேர்த்திருந்த மேத்யூ ஷார்ட் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் டிராவிஸ் ஹெட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியானது முடிவு எட்டப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியானது 4 புள்ளிகளைப் பெற்றதுடன், நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.