பந்துவீச்சாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தோனி; ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 217 ரன்களை குவித்தது. இதனை அடுத்து களம் இறங்கிய லக்னோ அணி அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார்கள்.
இதில் ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுழற் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.இதில் வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகமாக நோபால்களும் ஓயிடுகளும் வீசினார்கள்.
இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு கருத்து தெரிவித்த கேப்டன் தோனி, “இன்றைய ஆட்டத்தில் இரண்டு அணிகளுமே ரன்களை வாரி குவித்தார்கள். முதலில் நாங்கள் ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதை யோசித்தோம். ஆனால் எங்களுக்கு முதல் போட்டியே சிறப்பாக அமைந்து விட்டது. 180 ரன்கள் அடித்தால் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்று அர்த்தம். ஆனால் இரண்டு அணிகளுமே 200க்கு மேல் அடிக்கும் போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது என்று அர்த்தம். சேப்பாக்கம் ஆடுகளம் முதலில் தோய்வாக இருக்கும் என நினைத்தேன்.
ஆனால் இங்கு ரன்களை அதிவேகமாக குவிக்க முடிகிறது. இதனை பார்த்ததும் எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இதேபோன்று தொடர்ந்து ஆடுகளங்களை அமைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வேக பந்துவீச்சாளர்கள் தங்களுடைய செயல்பாட்டில் முன்னேற்றம் செய்ய வேண்டும். களத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப வகையில் பந்து வீசுங்கள். பில்டர்கள் எங்கே நிற்கிறார்களோ பந்து அங்கே செல்லும் வகையில் நீங்கள் உங்கள் திட்டத்தை மாற்றி அமைத்து பந்து வீச வேண்டும். சிக்ஸர் சென்றால் கூட பில்டர்கள் இருக்கும் இடத்தில் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்.
எதிரணி பந்துவீச்சாளர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கவனியுங்கள். அவர்கள் என்ன யுத்திகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதனை நீங்களும் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் கூடுதலாக நோபால் மற்றும் ஓயிடு பால்களை வீசினோம். இது நிச்சயம் சரியான விஷயம் கிடையாது. நோபால்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் நீங்கள் புதிய கேப்டன் கீழ விளையாட நேரிடும். இது என்னுடைய இரண்டாவது எச்சரிக்கை. இல்லை எனில் அதன் பிறகு நான் சென்று விடுவேன்” என்று தோனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.