CWC 2023 Qualifiers: மெக்முல்லன் அபார சதம்; நெதர்லாந்துக்கு 278 டார்கெட்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 6 சுற்றின் 8ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு மெக்பிரைட் - மேத்யூ கிராஸ் இணை தொடக்கம் கொடுத்தனர் இதில் மேத்யூ கிராஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய பிராண்டன் மெக்முல்லன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதற்கிடையில் கிறிஸ்டோபர் மெக்பிரைட் 32 ரன்களிலும், ஜார்ஜ் முன்ஸி 9 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் மெக்முல்லனுடன் இணைந்த கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராண்டன் மெக்முல்லன் இத்தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் ரிச்சி பெர்ரிங்டனும் தனது அரைசதத்தைக் கடந்தார்.
பின் 11 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 106 ரன்களில் மெக்முல்லன் ஆட்டமிழக்க, மறுபக்கம் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 64 ரன்களை எடுத்திருந்த ரிச்சி பெர்ரிங்டனும் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து மைக்கேல் லீஸ் ஒரு ரன்னுக்கும், கிறிஸ்டோபர் க்ரீவ்ஸ் 18 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் தாமஸ் மெக்கிண்டோஷ் அதிரடியாக விளையாடி 38 ரன்களைச் சேர்த்து அணிக்கு உதவினார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களைச் சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பாஸ் டி லீட் 5 விக்கெட்டுகளையும், ரியான் கெலின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்,