உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: டெக்ரெல், டெக்டர் அரைசதம்; ஓமனிற்கு 282 டார்கெட்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.
அதன்படி இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4ஆவது போட்டியில் அயர்லாந்து - ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்ச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. இதில் ஆண்டி மெக்பிரைன் 20 ரன்களிலும், பால் ஸ்டிர்லிங் 23 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஆண்டி பால்பிர்னியும் 7 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடிய லோர்கன் டக்கர் 26 ரன்களுடன் நடையைக் கைட்டினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹேரி டெக்டர் - ஜார்ஜ் டக்ரெல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பி 52 ரன்களுக்கு ஹேரி டெக்டர் ஆட்டமிழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜ் டக்ரேல் 91 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் களமிறங்கிய கரெத் டெலானி 20, மார்க் அதிர் 15, கிராஹம் ஹூம் 15 ரன்களைச் சேர்க்க அயர்லாந்து அணி இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்களைச் சேர்த்தது. ஓமன் அணி தரப்பில் பிலால் கான, பட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.