CWC 2023 Qualifiers: லோகன் வான் பீக் அபாரம்; விண்டீஸை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது நெதர்லாந்து!

Updated: Mon, Jun 26 2023 21:08 IST
Image Source: Google

இந்தியாவில் இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் ஐசிசி்யின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க இவர்களது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை தாண்டியது. 

அதன்பின் 54 ரன்களில் சார்லஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ப்ரூக்ஸ் 25 ரன்களுக்கும், ஷாய் ஹோப் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து 76 ரன்களை எடுத்திருந்த பிராண்டன் கிங்கும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.  அதேசமயம் இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் வழக்கம் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதற்கிடையில் செஃபெர்ட் ரன்கள் ஏதுமின்றியும், ஜேசன் ஹோல்டர் 8 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய கீமோ பாலும் அதிரடியில் மிரட்ட, மறுபக்கம் நிக்கோலஸ் பூரன் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 376 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிக்கோலஸ் பூரன் 6 சிக்சர், 9 பவுண்டரிகள் என 104 ரன்களையும், கீமோ பால் 4 பவுண்டரி, 2 சிச்கர்கள் என 46 ரன்களையும் குவித்தனர். 

இதையடுத்து கடின இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் - விக்ரம்ஜித் சிங் தொடக்கம் கொடுத்தனர். இதில் மேக்ஸ் ஓடவுட் 36 ரன்களிலும், விக்ரம்ஜித் சிங் 37 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வெஸ்லி பரேஸி 27 ரன்களிலும், பாஸ் டி லீட் 33 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த தேஜா நிடமனுரு - ஸ்காட் எட்வர்ட்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கொண்டுவந்தனர். அதன்பின்னும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தேஜா நிடமனுரு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

அதன்பின் 67 ரன்களை எடுத்திருந்த ஸ்காட் எட்வர்ட்ஸ் 67  ரன்களில் ரன் அவுட்டாக, அவரைத் தொடர்ந்து 11 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 111 ரன்களை எடுத்திருந்த நிடமனுருவும் விக்கெட்டை இழந்தார். இவர்களைத் தொடர்ந்து வந்த சகிப்பும் 3 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் நெதர்லாந்து அணி வெற்றிக்கு 30 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டது.  ரோஸ்டன் சேஸ் வீசிய 49ஆவது ஓவரில் லோகன் வான் பீக் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரிகளை விளாசியதுடன் அந்த ஓவரில் 21 ரன்களைச் சேர்த்தார். இதனால் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் போட்டியில் வெற்றி யாருக்கு என்ற பதற்றம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

அல்ஸாரி ஜோசப் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் வான் பீக் பவுண்டரி விளாசி ஆட்டத்தின் பிரஷரைக் குறைக்க,  மறுமுனையில் இருந்த ஆர்யன் தத் 16 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் லோகன் வான் பீக் அடிக்க முன்று ஜேசன் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதனால் ஆட்டம் சூப்பர் ஓவரை நோக்கி சென்றது. 

அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சூப்பர் ஓவரை ஜேசன் ஹோல்டர் வீச அதனை எதிர்கொண்ட லோகன் வான் பீன் அடுத்தடுத்து 3 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 30 ரன்களைக் குவித்தார். இதையடுத்து 31 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜான் சார்லஸ் முதல் பந்தை சிக்சருக்கு விளாசியதை தவிற அந்த அணியால் மேற்கொண்டு ஒரு பவுண்டரியைக் கூட அடிக்க முடியால் விக்கெட்டை இழந்தனர்.

இதன்மூலம் நெதர்லாந்து அணி சூப்பர் ஓவரில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இதன்மூலம் நெதர்லாந்து அணி உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த லோகன் வான் பீக் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை