உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: எர்வின், வில்லியம்ஸ் சதத்தால் நேபாளத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!

Updated: Sun, Jun 18 2023 19:54 IST
Image Source: Google

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் சூப்பர் லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

எஞ்சிய 2 அணிகள் எவை? என்பதை நிர்ணயிப்பதற்தான உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் இன்று தொடங்கியது. இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து நேபாள அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோர் களம் இறங்கினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த நிலையில் குஷால் புர்டெல் 99 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து குஷால் மல்லா களம் இறன்கினார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆசிப் ஷேக் 66 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து ரோஹித் பவுடல் களம் இறங்கினார்.

ரோஹித் பவுடல்-குஷால் மல்லா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் குஷால் மல்லா 41 ரன்னும், ரோஹித் பவுடல் 31 ரன்னும் எடுத்த நிலையில் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ஆரிப் ஷேக், குல்சன் ஜா இணை ஜோடி சேர்ந்தனர். இறுதியில் நேபாள அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு கும்பி மற்றும் கேப்டன் கிரேஜ் எர்வின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் 25 ரன்களை மட்டுமே எடுத்திருந்த கும்பி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய வெஸ்லி மதேவெரே 32 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் எர்வினுடன் இணைந்த சீன் வில்லியம்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி நிலையில் கேப்டன் கிரேக் எர்வின் தனது நான்காவது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்ய, சிறிது நேரத்திலேயே சீன் வில்லியம்ஸும் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 44.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் நேபாள் அணியையும் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் இறுதிவரை களத்தில் இருந்த கேப்டன் கிரேக் எர்வின் 121 ரன்களையும், சீன் வில்லியம்ஸ் 102 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.     

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை