CWC 2023 Warm-Up Game: மொயீன் அலி அதிரடியில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஓரிரு நாள்களே உள்ளன. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளும் தங்களுக்குள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. இதில் கௌகாத்தியில் இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் மறுபக்கம் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தன்ஸித் ஹசனும் 45 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனார்.
இதற்கிடையில் மழையின் காரணத்தால் ஆட்டம் 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடி வங்கதேச அணி 37 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மெஹிதி ஹாசன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, தன்சித் ஹாசன் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ரீஸ் டாப்லீ 3 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லே மற்றும் அடில் ரஷித் தலா இரண்டு விக்கெட்டுகளையும், சாம் கரண் மற்றும் மார்க் வுட் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய டேவிட் மாலன் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பி 34 ரன்கள் எடுத்த நிலையில் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து ஹாரி ப்ரூக் 17 ரன்களுக்கும், கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 39 ரன்களுக்கும், லியாம் லிவிங்ஸ்டோன் 7 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய மொயீன் அலி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 39 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 56 ரன்களையும், மறுப்பக்கம் நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 24.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.