காமன்வெல்த் 2022: பார்படோஸை பந்தாடியது இந்தியா!
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த மகளிர் டி20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி, பார்படோஸ் அணியுடன் மோதியது. 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்த நிலையில், இந்திய அணி இரண்டாவது ஆட்டத்தில், சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
தொடர்ந்து நேற்று நடந்த இந்திய அணி தனது 3ஆவது லீக் ஆட்டத்தில் பார்படோஸ் அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற பார்படோஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 56(46) ரன்களும், ஷஃபாலி வர்மா 43(26) ரன்கள் அடித்திருந்தனர்.
இதையடுத்து 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பார்படோஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா தரப்பில் ரேனுகா சிங் 4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பாக பந்து வீசினார்.
மேக்னா சிங், ராணா, ராதா யாதவ், ஹர்மன்பிரீத் கவுர் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்திருந்தனர். இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின் இந்திய அணி பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.