டி20 உலகக்கோப்பை 2024: டலாஸ், ஃபுளோரிடா, நியூயார்க்கில் போட்டிகள்!
சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை பின்னுக்கு தள்ளி ரசிகர்களின் அபிமான வடிவமாக உருவெடுத்துள்ள டி20 போட்டிகளின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2024 உலகக் கோப்பை அடுத்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 அணிகள் மோதும் இந்த தொடரின் பெரும்பாலான போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2010க்குப்பின் 13 வருடங்கள் கழித்து நடைபெற உள்ளது.
ஆனால் அமெரிக்காவில் முதல் முறையாக ஐசிசி உலக கோப்பை போட்டிகள் நடைபெறுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். குறிப்பாக அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் இந்த முக்கியமான முடிவை ஏற்கனவே எடுத்த ஐசிசி அதற்கான உரிமையையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஏற்கனவே நிறைய மைதானங்கள் இருக்கும் நிலையில் அமெரிக்காவில் இத்தொடரை வெற்றிகரமான நடத்துவதற்கான வேலைகளை ஐசிசி தொடங்கியுள்ளது.
அதாவது அமெரிக்காவில் பிரபலமான நியூயார்க், ஃபுளோரிடா மற்றும் டாலஸ் ஆகிய நகரங்களில் இந்த உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது. அதில் எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கக்கூடிய ஆசிய கண்டத்தின் பரம எதிரிகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நியூயார்க் நகரில் நடைபெறும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
இருப்பினும் தற்போது அங்கு இருக்கும் மைதானத்தில் சர்வதேச அளவிலான வசதிகள் இல்லை. எனவே 34,000 ரசிகர்கள் அமரும் அளவுக்கு நியூ யார்க் நகரில் இருக்கும் இசேன்ஹவர் பார்க் கிரிக்கெட் மைதானத்தை புதுப்பித்து கட்டமைக்குமாறு அமெரிக்க வாரியத்திற்கு ஐசிசி உத்தரவிட்டுள்ளது. அதனால் அந்த மைதானத்தை புதுப்பிப்பதற்கான வேலைகள் அங்குள்ள அரசின் அனுமதி கிடைத்த உடன் தொடங்கும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.
அதே போல டாலஸ் நகரில் இருக்கும் மைதானத்தில் ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்கள் அமர்வதற்கான வசதிகள் இல்லாததால் அதையும் புதுப்பிக்குமாறு ஐசிசி அமெரிக்க வாரியத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் ஃபுளோரிடா நகரில் இருக்கும் மைதானத்தில் ஏற்கனவே நிறைய சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக கடந்த மாதம் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி 2 போட்டிகள் அங்கு தான் நடைபெற்றன.
எனவே அங்கு மேற்கொண்டு எந்த கட்டமைப்புகளும் தேவையில்லை என்று ஐசிசி தெரிவித்துள்ளது. அந்த வகையில் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அமெரிக்காவில் நடைபெறப் போகிறது என்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனால் வரும் காலங்களில் கிரிக்கெட்டை அமெரிக்க மக்கள் விரும்பி பார்ப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.