SA vs SL: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த டேன் பேட்டர்சன்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்றது.இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களும் இலங்கை அணி 328 ரன்களும் சேர்த்தது.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 317 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இலங்கைக்கு 348 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 238 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
மேலும் இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்க அணி எதிர்வரும் பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றிபெற்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கும் முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டவது டெஸ்ட் போட்டியில் அபாரமான பந்துவீச்சின் மூலம் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் டேன் பேட்டர்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக இப்போட்டியின் பிளேயிங் லெவனில் டேன் பேட்டர்சன் சேர்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
டேன் பேட்டர்சன் தனது எக்ஸ் பதிவில், “எனது தேர்வை சந்தேகித்த அனைத்து வெறுப்பாளர்களுக்கும் வணக்கம். இது உங்களுக்கானது. எனது தேர்வு குறித்த எதிர்மறையான கருத்துக்களுக்கு நன்றி. நாள் முடிவில் இது உங்களைப் பற்றியது அல்ல. இது அணியைப் பற்றியது. மேலும் பாப்பிங் க்ரீஸ் எஸ்ஏ என்னைப் பற்றி பேசுவதற்கு முன் எனது முதல் வகுப்பு புள்ளிவிவரங்களை மீண்டும் சரிபார்த்து கொள்ளவும்” என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.