இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய இடம் உள்ளது - டேனியல் விட்டோரி!

Updated: Tue, May 31 2022 17:39 IST
Daniel Vettori on Hardik Pandya’s batting position in Indian team (Image Source: Google)

கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தனது அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

இதனையடுத்து கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை தற்போது இந்திய அணியின் பக்கம் திரும்பியுள்ளது. இந்திய அணி அடுத்த 6 மாதங்களில் ஆசியக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை என இரண்டு முக்கிய சவாலை ஏற்கவுள்ளது. இதற்கான அணி தான் இன்னும் சரியாக முடிவு செய்யப்படாமலேயே உள்ளது. இளம் வீரர்கள் மற்றும் சீனியர் வீரர்கள் கலந்து இருக்கும்படி டிராவிட் சிந்தித்து வருகிறார்.

தற்போதைக்கு இந்திய அணியில் ஓப்பனிங்கில் கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, ஷிகர் தவான் உள்ளனர். முதல் விக்கெட்டிற்கு விராட் கோலி இருக்கிறார். எனினும் மிடில் ஆர்டரில் தான் தற்போது வரை பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் என மூன்று முன்னணி வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் சரிவரவில்லை.

இந்நிலையில் அந்த இடத்திற்கு ஹர்திக் பாண்டியா தான் மிகச்சரியாக இருப்பார் என நியூசிலாந்து முன்னாள் வீரர் டேனியல் விட்டோரி கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய டேனியல் விட்டோரி, “ஹர்திக் பாண்ட்யாவை 4ஆவது வீரராக பொருத்த முடிந்தால் நிச்சயம் செய்ய வேண்டும். ஏனென்றால் ஐபிஎல் தொடரில் பாண்ட்யா 15 இன்னிங்ஸ்களில் 487 ரன்களை டாப் ஆர்டரில் குவித்துள்ளார்.

நான் சூர்யகுமாரை ஒதுக்க வேண்டும் எனக்கூறவில்லை. ஆனால் ஹர்திக் சிறந்த தேர்வு எனக்கூறுகிறேன். தற்போதைக்கு சூர்யகுமார் யாதவ் 5வது வீரராக களமிறங்கலாம். ரிஷப் பந்த் 6ஆவது வீரராக அதிரடி காட்ட உதவுவார். இதன் மூலம் இந்தியாவின் பேட்டிங் ஆழம் சற்று நன்றாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை