சிபிஎல் 2024 எலிமினேட்டர்: மில்லர் அதிரடியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பார்படாஸ் ராயல்ஸ்!

Updated: Wed, Oct 02 2024 09:11 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்றின் முடிவில் செயின்ட் லூசியா கிங்ஸ், கயானா அமேசன் வாரியர், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு சுனில் நரைன் - ஜேசன் ராய் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுனில் நரைன் 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜேசன் ராயுடன் இணைந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ஆனால் மறுபக்கம் ஜேசன் ராய் 25 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கீரன் பொல்லார்டும் 17 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பூரன் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 91 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய ஆண்ட்ரே ரஸல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களைச் சேர்த்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபட்டது 

இதன் காரணமாக இப்போட்டியானது கிட்டத்திட்ட 2 மணி நேரங்களு மேல் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் இன்னிங்ஸ் அத்துடன் முடிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. மேற்கொண்டு இப்போட்டியானது நடைபெறுமா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. ஆனால் அதன்பின் மைதான ஊழியர்கள் பிரச்சனையை சரிசெய்து முடித்ததன் காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு 5 ஓவர்களில் 60 ரன்கள் என்ற இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய ராயல்ஸ் அணிக்கு கேப்டன் ரோவ்மன் பாவெல் - குயின்டன் டி கான் இணை தொடக்கம் கொடுத்தனர்.  இதில் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் டி காக் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். அதிலும் குறிப்பாக டேவிட் மில்லர் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்சர்களை விளாசி அசத்தியதன் காரணமாக, ராயல்ஸ் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

Also Read: Funding To Save Test Cricket

தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டேவிட் மில்லர் 17 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்களை விளாசி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பார்படாஸ் ராயல்ஸ் அணி 4.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் இந்த தோல்வியின் மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது எலிமினேட்டர் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை