அடுத்த ஆஷஸ் தொடருடன் ஓய்வை அறிவிக்கும் டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம்வருபவர் டேவிட் வார்னர். இவர் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியின் பிரதான தொடக்க வீரராகவும் திகழ்ந்து வருகிறார்.
தற்போது 36 வயதாகும் டேவிட் வார்னர், ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 96 டெஸ்டுகளில் விளையாடி 24 சதம், 34 அரைசதங்கள் என மொத்தம் 7,817 ரன்களை சேர்த்துள்ளார்.
மேலும் 2009ஆம் ஆண்டு முதல் 138 ஒருநாள், 99 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர், 19 சதம், 50 அரைசதங்கள் என 8,151 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த வருட ஆஷஸ் தொடருக்குப் பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஒரு பேட்டியில் டேவிட் வார்னர் கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தான் முதலில் விடைபெறுவேன். அப்படித்தான் நடக்கும். அடுத்த டி20 உலகக் கோப்பை 2024-ல் நடைபெறும். அடுத்த வருடம் ஒருநாள் உலகக் கோப்பை.
எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய கடைசி 12 மாதங்களாக இருக்கும். எனக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட், டி20 மிகவும் பிடிக்கும். 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளேன்” என தெரிவித்தார்.