களத்தில் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினோம் - டேவிட் வார்னர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 64ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 213 ரன்களைச்ச் செர்த்தது. இதில் அதிகபட்சமாக ரைலீ ரூஸோவ் 82 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்திலிருந்தே தடுமாறினாலும், லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை போராடி 94 ரன்களைக் குவித்தார். இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இதுகுறித்து டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேசுகையில், “களத்தில் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினோம் என்றே நினைக்கிறேன். ஆனால் இந்தப் போட்டியில் எங்க்ள பலம் என்ன என்பதை அறிந்து செயல்பட்டோம். அதேபோல் டெல்லி ஆடுகளம் போல் அல்லாமல், இந்த பிட்ச் சிறப்பாக இருந்தது.
அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கில் பிரித்வி ஷா கொடுத்த இம்பேக்ட் பார்ப்பதற்கே சிறப்பாக அமைந்தது. ரைலி ரூஸோவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். டெல்லி பிட்ச்சில் சிறந்த பேட்டிங்கை செய்ய தவறியுள்ளோம். ஆனால் இன்றையப் போட்டியில் வென்று 2 புள்ளிகளை பெற்று மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.