ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்!
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளது இந்திய அணியை மட்டுமல்லாது ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் பாதிப்பை கொடுத்துள்ளது. கடந்த 2022, டிசம்பர் 30ஆம் தேதி ரிஷப் பந்த், காரில் பயணித்த போது விபத்தில் சிக்கினார். அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து மீண்டு களம் திரும்ப எப்படியும் கொஞ்ச காலம் ஆகும் என தெரிகிறது.
ஐபிஎல் அரங்கில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 2021 மற்றும் 2022 என இரண்டு சீசன்கள் பந்த் கேப்டனாக வழிநடத்தி உள்ளார். அவர் மீது டெல்லி அணி நிர்வாகம் மிகுந்த நம்பிக்கை வைத்து அந்த பொறுப்பை கொடுத்தது. அவரும் அதனை சிறப்பாகவே செய்து வந்தார்.
இந்நிலையில் தான் அவருக்கு விபத்து ஏற்பட்டு, தற்போது ஐபிஎல் தொடரை தவறவிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், “இது மிகவும் இக்கட்டான காலம். பந்த் இல்லாதது துரதிர்ஷ்டவசம். அவர் விளையாட போதுமான உடற்திறனை பெறவில்லை என்றாலும் எங்களுடன், எனக்கு பக்கத்தில் ஐபிஎல் தொடர் நடக்கும் போது இருக்கலாம். இது அவரது உடல் ஒத்துழைத்தால் மட்டுமே. அவர் இருப்பதே எங்களுக்கு எனர்ஜிதான்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் டேவிட் வார்னர் ஐபிஎல் களத்தில் கேப்டனாக அணியை திறம்பட வழிநடத்திய அனுபவமும் கொண்டுள்ளார். அணியின் தலைவனாக சிறப்பான ஆட்டத்தையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார். மேலும் 2016இல் அவர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே டெல்லி அணி வார்னரை கேப்டனாக நியமித்துள்ளது.