திருமணத்திற்காக விடுப்பு எடுத்த முகேஷ் குமார்; தீபக் சஹாருக்கு வாய்ப்பு!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை மீண்டும் இந்தியா எதிர்கொண்டு வரும் இத்தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கியுள்ள இந்தியா முதலிரண்டு போட்டிகளில் வென்றது.
குறிப்பாக கேப்டன் சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங், இஷான் கிஷான் ஆகியோர் முதல் இரண்டு போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்து 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலையும் பெற்று கொடுத்தனர். இந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கப் போகும் முக்கியமான 3ஆவது போட்டி இன்று கௌதாத்தியில் துவங்கியது.
இதில் கண்டிப்பாக வென்றால் தான் இத்தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நிலைமையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. மறுபுறம் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் இப்போட்டியில் விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ஆவேஷ் கான் விளையாடுவார் என்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்தார்.
இந்நிலையில் முகேஷ் குமார் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதால் தமக்கு விடுப்பு கொடுக்குமாறு தங்களிடம் அனுமதி கேட்டதாக பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் அவருக்கு விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள பிசிசிஐ திருமணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் ராய்ப்பூரில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது போட்டியில் முகேஷ் குமார் இந்தியாவுக்காக விளையாடுவார் என்றும் கூறியுள்ளது.
அந்த வகையில் திடீரென விடுப்பு பெற்று திருமணத்திற்காக சென்றுள்ள முகேஷ் குமாருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பெங்காலை சேர்ந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நிகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஒரே மாதத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வகையான இந்திய அணியிலும் விளையாடும் வாய்ப்பை பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
ஏனெனில் ஒரு வகையான கிரிக்கெட்டிலேயே இந்தியாவுக்கு விளையாடுவது கடினமாக பார்க்கப்படும் நிலையில் அவர் அசால்டாக 3 வகையான கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பில் இதுவரை நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ள அவர் தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளார். இது மட்டுமல்லாமல் தீபக் சஹர் இத்தொடரின் கடைசி 3 போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.