டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் தீபக் சஹார்?

Updated: Wed, Oct 12 2022 12:57 IST
Image Source: Google

எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களங்களில் தொடங்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளது.

அக்டோபர் 16ஆம் தேதி இந்த தொடரின் முதல் போட்டி நடைபெற உள்ளது. டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக கடந்த சில தினங்களுக்கே முன்பு ஆஸ்திரேலியா சென்றுவிட்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள், உலகக்கோப்பை தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்திய அணி 23ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

அடுத்த சில தினங்களில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க இருந்தாலும், காயத்தால் விலகிய பும்ராவிற்கு பதிலான மாற்று வீரரை தேர்வு செய்யாமல் பிசிசிஐ தற்போது வரை இழுத்தடித்து வருகிறது. பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், தற்போது மற்றொரு நட்சத்திர வீரரான தீபக் சாஹரும் காயத்தால் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிட்டத்தட்ட கடந்த 6 மாதங்களுக்கு மேலாக காயத்தால் அவதிப்பட்டு வரும் தீபக் சாஹர் சமீபத்தில் தான் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து, இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார். ஓரிரு போட்டிகளில் விளையாடிய நிலையில், அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டதால் தீபக் சாஹர் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். 

அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். டி20 உலகக்கோப்பை தொடருக்கான ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த தீபக் சாஹர், டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக காயத்தில் இருந்து குணமடைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் டி20 உலக்ககோப்பை தொடரிலும் விளையாட வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூரை தேர்வு செய்ய பிசிசிஐ., திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போல் பும்ராவிற்கு பதிலாக முகமது ஷமியை அணியில் எடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. முகமது சிராஜ் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது. முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி நாளை ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை