காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் தீபக் சஹார்?

Updated: Thu, May 02 2024 20:12 IST
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் தீபக் சஹார்? (Image Source: Google)

சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்து அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. அதன்படி நேற்றைய போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் ஹர்ப்ரீத் பிரா மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் 46 ரன்களில் ஜானி பேர்ஸ்டோவும், 43 ரன்களில் ரைலீ ரூஸோவும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்புகளை தவறவிட்டனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஷாங்க் சிங் 25 ரன்களையும், சாம் கரண் 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

இந்நிலையில் இப்போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தீபக் சஹார் முதல் ஓவரில் இரண்டு பந்துகளை மட்டுமே வீசிய நிலையில் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவில் தீபக் சஹாரின் காயம் தீவிரமடைந்துள்ளதாகவும், இதனால் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து அவர் விலகக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபக் சஹாரின் உடல்நிலை குறித்து பேசியுள்ள அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங், “தீபக் சஹாரின் காயம் பெரிய அளவில் இல்லை என்றாலும், அவரது பரிசோதனையின் முடிவில் அவர் நன்ற உணரவில்லை. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் எந்த அளவுக்கு நலமுடன் இருக்கிறார் என்பது தெரிய வரும். அணியின் பிசியோ மற்றும் மருத்துவரின் பரிசோதனைக்கு பிறகே அவர் குறித்து முழுமையாக தெரியவரும்.

அதேசமயம் விசா காரணமாக இலங்கை வீரர்கள் மதீஷா பதிரனா, மஹீஷ் தீக்‌ஷனா ஆகியோர் இலங்கை திரும்பியுள்ளனர். இருப்பினும் அவர்கள் அடுத்த போட்டிக்குள் அணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கிறேன். அதேபோல் அறிமுக வீரரான ரிச்சர்ட் கிளீசன் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் முஸ்தஃபிசூர் ரஹ்மான் இனி விளையாட மாட்டார் என்பது பெரும் ஏமாற்றமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை