ரிஷப் பந்த் தனது ஃபார்மை மீட்டெடுக்க தோனியிடம் பேச வேண்டும் - வீரேந்திர சேவாக் அறிவுரை!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தொடர்ந்து ரன்களைச் சேர்க்க முடியாமல் தாடுமாறி வருகிறார்.
இத்தொடருக்கு முன்னதாக நடந்து முடிந்த ஐபிஎல் வீர்ர்கள் ஏலத்தில் ரிஷப் பந்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது ரூ.27 கோடிக்கும் அதிகமான தொகை கொடுத்து ஏலம் எடுத்திருந்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் பெருமையையும் பெற்றிருந்தார். மேற்கொண்டு அவர் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தது.
ஆனால் ரிஷப் பந்த் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ள நிலையில் மொத்தமாகவே 128 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதனால் அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்த விமர்சனங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ரிஷப் பந்த் தனது மோசமான ஃபார்மில் இருந்து வெளியேற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ்தோனியிடம் ஆலோசனைப் பெற வேண்டுமென முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ரிஷப் பந்த் நல்ல ஃபார்மில் இருந்தபோது அவர் செய்த சில ஐபிஎல் காணொளிகளை மீண்டும் பார்க்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் அது அவரது நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும். பெரும்பாலும், சில நேரங்களில் வழக்கமாகச் செய்யும் சிலவற்றை நாம் மறந்துவிடுவோம். மேலும் அவர் காயத்திற்கு முன்பு பார்த்ததிலிருந்து வித்தியாசமாகத் தெரிகிறார்.
இதே நிலையில் நானும் இருந்துள்ளேன். 2006/07 இல் நான் ரன்கள் எடுக்க சிரமப்பட்டதன் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பாட்டேன். அப்போது ராகுல் டிராவிட் என்னிடம் எனது பழைய ஆட்டம் குறித்த கணொளிகளை மீண்டும் பார்க்க பரிந்துரைத்தார். இதன் மூலம் உங்கள் வழக்கத்தில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட ரன்கள் எடுக்கும் உங்கள் திறனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை புரிந்துகொண்டேன். அதனால் ரிஷப் பந்த் அதனை செய்ய வேண்டும்.
Also Read: LIVE Cricket Score
மேலும், அவர் தனது மொபைலை எடுத்து யாரிடமாவது பேச வேண்டும். அவர் சோகமாகவோ அல்லது எதிர்மறையாகவோ உணர்ந்தால், அவர் தொடர்பு கொள்ளக்கூடிய பல கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். மகேந்திர சிங் தோனி அவரது முன்மாதிரி என்பதால், ரிஷப் பந்த் அவரிடம் பேச வேண்டும். அது ரிஷப் பந்திற்கு நிச்சமாக உதவும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.