சில மோசமான ஷாட்களை விளையாடினோம் - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் என டாப் ஆர்டர் வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தானர். அதன்பின் களமிறங்கிய அனிகெத் வர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைப் பதுசெய்ததுடன் 74 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவருடன் இணைந்து விளையாட ஹென்ரிச் கிளாசென் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறியதன் காரணமாக அந்த அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மேற்கொண்டு குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், மோஹித் சர்மா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 38 ரன்களையும், அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 50 ரன்களிலும், அடுத்து வந்த கேஎல் ராகுல் 15 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அபிஷேக் போரல் 34 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய பாட் கம்மின்ஸ், “இன்றைய ஆட்டத்தில் நாங்கள் நினைத்த இலக்கை எங்களால் எட்டமுடியவில்லை. சில தவறான ஷாட்களால் ரன்களை சேர்க்க முடியாமல் போனது. ஆனால் இந்த வடிவத்தில் இதுபோன்று நடப்பது இயல்பானது. இது பெரிய வித்தியாசம் என்று நான் நினைக்கவில்லை, மற்றொரு நாளில், நீங்கள் இரண்டு ஷாட்களுடன் முன்னேறிச் செல்லலாம். ஆனால் கடந்த இரண்டு போட்டிகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. அதனால் நாங்கள் எங்களின் தவறுகளை திருத்தி மீண்டும் திரும்பி வருவது பற்றி அலோசிக்க வேண்டும்.
Also Read: Funding To Save Test Cricket
இன்றைய போட்டியை பொறுத்தவரையில் அனிகேத் வர்மா அபாரமாக செயல்பட்டதுடன், எங்களுக்கான பாதி வாய்ப்பினையும் கொடுத்தார். இது தொடரின் ஆரம்பம் தாம் என்பதால் நாங்கள் மீண்டும் முன்னேறுவோம் என்று நம்புகிறேன். மேற்கொண்டு நாங்கள் எங்களிடம் உள்ள சில விருப்பங்களைப் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது அடுத்ததாக ஏப்ரல் மூன்றாம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடவுள்ளது.