பேட்டிங்கில் தொடக்கமும், முடிவும் சரியாக அமையவில்லை - சாம் கரன்!

Updated: Sun, Apr 14 2024 13:02 IST
பேட்டிங்கில் தொடக்கமும், முடிவும் சரியாக அமையவில்லை - சாம் கரன்! (Image Source: Google)

பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று சண்டிகரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியானது எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா 31 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தொடக்கத்தில் தனுஷ் கோட்யனை தொடக்க வீரராக களமிறக்கி தவறு செய்ததால், ஆரம்பத்திலேயே ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறியது. இதனால் இப்போட்டியில் கடைசி வரை எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் கடைசி ஓவரில் ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடியாக விளையாடி இரண்டு சிக்ஸர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஷிம்ரான் ஹெட்மையர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்தது. 

இந்நிலையில் இத்தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன், “இன்றைய போட்டிக்கான ஆடுகள் சற்று மொதுவாக இருந்ததாக நினைக்கிறேன். ஆனாலும் நாங்கள் இந்த பேட்டிங்கில் சிறப்பாக தொடக்கத்தையும், சிறப்பாக முடிக்கவும் இல்லை.  இருப்பினும் கடைசி கட்டத்தில் விளையாடிய பேட்டர்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்துள்ளனர். அவர்களின் உதவியால் தான் நாங்கள் 150 ரன்களுக்கு அருகில் சென்றோம்.

இப்போட்டியில் எங்களது பந்துவீச்சு சிறப்பாக இருந்ததாக நினைக்கிறேன். நாங்கள் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொண்டே இருந்தோம். ஆனால் மீண்டும் கடைசி ஓவரில் சென்று தோல்வியடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது. எங்களின் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினோம். பவுலிங் மற்றும் ஃபீல்டிங் நன்றாக இருந்தது. நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளில் கம்பேக் கொடுப்போம் என்று நம்புகிறேன்.

தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைவது கொஞ்சம் கடினமான விஷயம் தான். மேலும் புதிய மைதானம் என்பதால் பிட்சை புரிந்து கொள்ள வேண்டிய தேவை அதிகரிக்கிறது. இந்த மைதானத்தில் முதல் போட்டியில் வென்றாலும், கடந்த 2 போட்டிகளில் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியைத் தழுவியுள்ளோம். ஆனால் நிச்சயம் கடந்த போட்டிகளில் எப்படி வென்றோமோ, அதேபோல் வெற்றிப்பாதைக்கு திரும்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை