கேஎல் ராகுலை இந்த இடத்தில் களமிறக்கலாம் - தினேஷ் கார்த்திக்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்ததாக வங்கதேசத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் அடங்கிய முதன்மை இந்திய அணி களமிறங்குகிறது. கூடவே சமீப காலங்களில் சுமாராக செயல்பட்ட சொதப்பல் நாயகன்கள் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரும் இத்தொடரில் களமிறங்குகிறார்கள்.
அதில் வாய்ப்புக்காக காலம் காலமாக காத்துக் கிடக்கும் சஞ்சு சாம்சன் இந்த வருடம் சிறப்பாக செயல்பட்டும் கழற்றி விடப்பட்டுள்ளார். மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சிய செயல்பாடுகளை வெளிப்படுத்தி விட்டார் என்பதற்காக அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக உருவாக்க நினைக்கும் இந்திய அணி நிர்வாகம் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் எப்போதுமே சிறப்பாக செயல்படாத ரிஷப் பந்துக்கு என்ன ஆனாலும் தொடர் வாய்ப்புகளை கொடுத்து வருகிறது.
அதிலும் துணை கேப்டன் என்ற பெயருடன் இந்த வங்கதேச தொடரில் சொதப்பினாலும் கேஎல் ராகுல் தான் உலக கோப்பையில் தொடக்க வீரராக களமிறங்கப் போகிறார். அப்படி உறுதியாக உலகக்கோப்பையில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இவர்கள் அதற்கு முன்பாக வெற்றிகரமாக செயல்படுவதற்கு தங்களது இடத்தை மாற்றி விளையாடுவது உதவும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அதாவது ரிஷப் பந்த் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் ராகுல் 5ஆவது இடத்திலும் விளையாடுவது நல்ல பலனை தரும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த வங்கதேச தொடரில் 5ஆவது இடத்தைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டும். அதில் ரிஷப் பண்ட் – கேஎல் ராகுல் ஆகியோரிடையே போட்டி ஏற்படலாம். இருப்பினும் அந்த இடத்தில் கேஎல் ராகுல் விளையாடுவார் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் நியூசிலாந்தில் இருந்து விமானம் வாயிலாக பயணித்ததால் ரிசப் பண்ட் மிகவும் சோர்வாக இருப்பார் என்பதால் இப்போட்டியில் அவர் ஓய்வு பெறலாம். மேலும் உலக கோப்பைக்கு கேஎல் ராகுல் மிகச் சிறந்த நம்பர் 5 பேட்ஸ்மேனாக இருப்பார். எனவே அந்த இடத்தில் அசத்தும் பட்சத்தில் அவரை அணி நிர்வாகம் அங்கேயே தொடரலாம்” என்று தெரிவித்துள்ளார்.