தினேஷ் கார்த்திகிடம் ஆலோசனை கேட்கும் ரிஷப் பந்த் - வைரல் காணொளி!

Updated: Mon, Oct 17 2022 14:04 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள 2022 டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் வலை பயிற்சிகளில் ஈடுபட்டு பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அவரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனைக் இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் டி20 அணியாக சாதனை படைத்து இத்தொடரில் களமிறங்கும் இந்தியாவுக்கு சமீபத்திய ஆசிய கோப்பை தோல்வியும் கடைசி நேரத்தில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியதும் பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. 

இருப்பினும் குறைகளை சரி செய்துகொண்டு ஆஸ்திரேலியாவில் வெற்றி வாகை சூடுவதற்காக இந்திய அணியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரியான பாகிஸ்தானை தன்னுடைய முதல் போட்டியில் இந்தியா சந்திக்கிறது. அதில் விளையாடும் 11 பேர் அணியை உறுதி செய்து விட்டதாக ஏற்கனவே கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்துள்ள நிலையில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு முதன்மை விக்கெட் கீப்பராக தன்னை அடையாளப்படுத்தியுள்ள இளம் வீரர் ரிஷப் பந்த் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் இதுவரை பெற்ற 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பில் ஒருமுறை கூட அனைவரது மனதிலும் நிற்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.

மறுபுறம் ஒருகட்டத்தில் வர்ணனையாளராக அவதரித்ததால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் தம்மால் உலக கோப்பையில் விளையாட முடியும் என்ற நம்பிக்கையுடன் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு 3 வருடங்களுக்குப்பின் கம்பேக் கொடுத்து 37 வயதுக்குப் பின் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள், 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரராக சாதனை படைத்து அசத்தி வருகிறார். இருப்பினும் சூர்யகுமார் யாதவ், பாண்டியா ஆகியோரும் பினிஷிங் செய்வார்கள் என்பதால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று சில முன்னாள் வீரர்கள் வைத்த கோரிக்கைக்கு செவி சாய்த்த ரோஹித் சர்மா ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் அவரை கழற்றி விட்டார்.

அதில் ரிஷப் பந்த் மீண்டும் சொதப்பியதால் பாடத்தை கற்ற ரோஹித் சர்மா அதன்பின் நடந்த ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்க டி20 தொடர்களில் வாய்ப்பளித்து உலக கோப்பையிலும் வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளார். மறுபுறம் கிடைத்த வாய்ப்புகளில் சொதப்பலாக செயல்பட்டு வரும் ரிஷப் பந்த் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற விமர்சனங்களை சந்தித்துள்ளார். இருப்பினும் மிடில் ஆர்டரில் மிரட்டக்கூடிய இடதுகை பேட்ஸ்மேனாகவும் இளம் வீரராகவும் இருக்கும் அவர் டி20 கிரிக்கெட்டில் முன்னேறுவதற்கு தினேஷ் கார்த்திக்கிடம் ஆலோசனை கேட்க வேண்டுமென அஜய் ஜடேஜா போன்ற சில முன்னாள் வீரர்கள் சமீபத்தில் கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் இன்று பிரபலமான பிரிஸ்பேன் நகரில் இருக்கும் காபா மைதானத்தில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் பயிற்சி போட்டியில் இந்தியா எதிர்கொண்டது. அதற்கு முன்பாக இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது தினேஷ் கார்த்திக்கிடம் டி20 கிரிக்கெட்டில் முன்னேறுவதற்கு ஆலோசனைகளை வழங்குமாறு ரிஷப் பந்த் கேட்டார். அப்படி சிஷ்யனை போல் ஆலோசனை கேட்ட அவரை நேரடியாக காபா பிட்ச்க்கு அழைத்துச் சென்ற தினேஷ் கார்த்திக் இருபுறங்களிலும் நின்று ஃபுல், கட் போன்ற ஷாட்களை சிறப்பாக அடிப்பதற்கான நுணுக்கங்களை வழங்கினார்.

எம்எஸ் தோனியை போலவே கடந்த 15 வருடங்களாக இந்தியா, ஐபிஎல், உள்ளூர் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அனுபவம் கொண்ட தினேஷ் கார்த்திக் கொடுத்த ஆலோசனைகளை ரிஷப் பந்த் உன்னிப்பாக கவனித்தார். இக்காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

ஏனெனில் சமீப காலங்களாகவே ரிஷப் பந்த் – தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கிடையே போட்டி நிலவுவதாக செய்திகள் வரும் நிலையில் நிறைய முன்னாள் வீரர்களும் அவரை விட இவர் சிறந்தவர் இவரை விட அவர் சிறந்தவர் என்று கூறிவருகின்றனர். ஆனால் இவர்கள் அவ்வாறு அல்லாமல் இந்தியாவுக்காக சிறந்து விளங்க குரு சிஷ்யனாக ஒன்று சேர்ந்து பயிற்சி எடுப்பது உண்மையில் பாராட்டத்தக்கதாகும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை