சஞ்சு சாம்சனை விட இஷான் கிஷனுக்கு தான் வாய்ப்பு தரவேண்டும் - தினேஷ் கார்த்திக்!

Updated: Wed, Jul 26 2023 23:35 IST
சஞ்சு சாம்சனை விட இஷான் கிஷனுக்கு தான் வாய்ப்பு தரவேண்டும் - தினேஷ் கார்த்திக்! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 1 – 0 என்ற கணக்கில் தொடரை வென்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. இதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா களமிறங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

அதில் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு தேவையான வீரர்களுக்கு இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரிஷப் பந்த் காயமடைந்துள்ள நிலையில் உலகக் கோப்பையில் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2ஆவது பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுவார் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் 2017இல் அறிமுகமாகி 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளைப் பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் போராடி கடந்த வருடம் கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டார்.

ஆனாலும் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் கழற்றி விடப்பட்ட அவருக்கு பதில் கேஎல் ராகுல் விளையாடினார். இருப்பினும் தற்போது ராகுல் காயமடைந்துள்ளதால் குறைந்தபட்சம் இந்த தொடரிலாவது அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் 2011 உலகக்கோப்பையில் கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகிய இடது கை வீரர்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது. ஆனால் தற்போதைய அணியில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் என டாப் 5 – 6 பேட்ஸ்மேன்கள் அனைவருமே வலது கை வீரர்களாக இருக்கின்றனர். எனவே உலகக்கோப்பையில் 2ஆவது பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை விட, இரட்டை சதமடித்து அதிரடியாக விளையாடும் இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷன் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருடைய போட்டி நிலவுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சஞ்சு சாம்சனை விட இஷான் கிஷன் சற்று முன்னுரிமையுடன் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன். ஏனெனில் இந்தியாவுக்கு தற்சமயத்தில் இடது கை வீரர்கள் தேவைப்படுகிறார்கள்.

அதன் காரணமாக இந்த தொடரிலேயே இஷான் கிசான் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன். அத்துடன் அவர் ரிஷர்வ் தொடக்க வீரராகவும் உலகக்கோப்பையில் விளையாடுவதற்கான திறமையைக் கொண்டுள்ளார்” என கூறினார். அதாவது இஷான் கிசான் தேர்வு செய்யப்பட்டால் இடது கை பேட்ஸ்மேன் பிரச்சினை மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பருக்கும் ஓப்பனிங் பேட்ஸ்மேனுக்கும் ரிசர்வ் வீரராக இருப்பார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை