யுவராஜ் சிங் சாதனையை தூளாக்கிய தீபேந்திர சிங் ஆரி; வைரல் காணொளி!
சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2014க்குப்பின் டி20 வடிவமாக சேர்க்கப்பட்ட கிரிக்கெட்டில் மகளிர் பிரிவில் இந்தியா தங்க பதக்கத்தை வென்றது. இதைத்தொடர்ந்து இன்று தொடங்கிய ஆடவர் பிரிவின் முதல் போட்டியில் மங்கோலியாவை சிதைத்த நேபாள் 273 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து உலக சாதனை படைத்தது.
ஹங்கொழு நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் தான் முதல் முறையாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மங்கோலியா காலடி வைத்தது. அதன் காரணமாக 11 பேரும் அறிமுக வீரர்களாக களமிறங்கிய அந்த அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நேபாளுக்கு புர்டெல் 19, ஆசிஃப் சேக் 16 என தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
ஆனால் அவர்களுக்கும் சேர்த்து அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ரோகித் பவுடேல் மற்றும் குசல் மல்லா ஆகியோர் மங்கோலிய பவுலர்களை தாறுமாறாக அடித்து நொறுக்கி 2வது விக்கெட்டுக்கு 194 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அமர்க்களப்படுத்தினார்கள். அதில் 34 பந்துகளிலேயே 100 ரன்கள் தொட்ட கவுசல் மல்லா சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் வேகமாக சதமடித்த வீரர் என்ற ரோஹித் சர்மா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரது சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார்.
அந்த ஜோடியில் பவுடேல் 2 பவுண்டரி 6 சிக்ஸருடன் 61 ரன்களில் அவுட்டானதை தொடர்ந்து வந்த திபேந்திரா சிங் ஆரி மங்கோலிய பவுலர்கள் கலங்கும் அளவுக்கு முதல் பந்திலிருந்தே 6, 6, 6, 6, 6, 6, 2, 6, 6 என 9 பந்துகளில் 8 சிக்ஸருடன் 50 ரன்கள் தொட்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற இந்தியாவின் யுவராஜ் சிங் மெகா சாதனையை தூளாக்கி புதிய உலக சாதனை படைத்தார்.
இருப்பினும் யுவராஜ் போல ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்காத அவர் 19, 20 ஆகிய 2 ஓவர்களில் சேர்ந்து அடித்து மொத்தம் 52 ரன்கள் எடுத்த நிலையில் மறுபுறம் கௌசல் 8 பவுண்டரி 12 சிக்ஸருடன் 137 ரன்கள் குவித்தார். அதனால் 20 ஓவர்களில் 314 ரன்கள் எடுத்த நேபாள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 300 ரன்கள் கடந்த முதல் அணி மற்றும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி இரட்டை உலக சாதனைகளை படைத்தது.
அதை தொடர்ந்து பந்து வீச்சிலும் அசத்திய அந்த அணி 13.1 ஓவரில் மங்கோலியாவை 41 ரன்களுக்கு சுருட்டி உலக சாதனை வெற்றி பெற்றது. அப்படி முதல் போட்டியிலேயே மோசமாக அடி வாங்கிய மங்கோலியா சார்பில் அதிகபட்சமாக ஜாம்யான்சுரேன் 10 ரன்கள் எடுத்த நிலையில் நேபால் சார்பில் அதிகபட்சமாக கரண், பொகாரா, சந்தீப் லமிசன்னே தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.