10 பந்துகளில் 30 இல்லை 35 ரன்கள் எடுக்க தீர்மானித்து இருந்தேன் - விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அந்த அணி 151 ரன்களை மட்டுமே எடுத்து, 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டியில் 33 பந்துகளில் ஆறு பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் 50 ரன்கள் எடுத்தும் மூன்று கேட்சுகள் பிடித்தும் அசத்திய விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற பின் பேசிட விராட் கோலி, “பந்து காற்றில் அதிக உயரம் கிளம்பியது. எனவே அதைப் பிடிப்பது மிகவும் கடினமான ஒன்று. நான் முதலில் என் அருகில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டேன். எனக்கு இதனால் பந்தை பிடிப்பதற்கான இடத்தை தீர்மானிப்பதற்கு நேரம் கிடைத்தது. இது மிகவும் கடினமாக இருந்தது ஆனால் மற்ற இரண்டு கேட்ச்கள் எளிமையானவைதான்.
புல்டாஸ் பந்தில் ஆட்டம் இழந்தது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. நான் இந்த முறை மிகவும் நன்றாகவே விளையாடினேன். 50 ரன்கள் எட்டிய பிறகு 10 பந்துகளில் 30 இல்லை 35 ரன்கள் எடுக்க தீர்மானித்து இருந்தேன். வழக்கமாக நான் விளையாடுகின்ற முறையில் இது 200 ரன்களை அணி தாண்டுவதற்கு உதவியாக இருந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. நான் இரண்டாவது பகுதியில் டிரெஸ்ஸிங் ரூமில் இந்த விக்கெட்டில் 174 ரன்கள் போதுமானதாக இருக்கும் என்று சக வீரர்களிடம் கூறினேன். விளையாடும்பொழுது விக்கெட்டில் வேகம் குறைவதை நான் உணர்ந்தேன்” என்று தெரிவித்தார்.