விராட் கோலி ஃபார்மில் இல்லையென்றாலும் அவரை எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது - யாசிர் ஷா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கிறது. இந்த ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 முறை மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி. அதே நம்பிக்கையுடன் பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்குகிறது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலில், அனுபவமும் இளமையும் கலந்த கலவையான நல்ல பேலன்ஸான வலுவான அணியாக இந்தியா இம்முறை களமிறங்குகிறது.
இந்திய அணியின் நட்சத்திர வீரரும் மேட்ச் வின்னருமான விராட் கோலி ஃபார்மில் இல்லாதது மட்டுமே இந்திய அணிக்கு ஒரே பிரச்னை. ஆனால் கோலி ஸ்கோர் செய்யாவிட்டாலும், அதை ஈடுகட்டும் அளவிற்கான பேட்டிங் ஆர்டர் இந்திய அணியில் உள்ளது. ஆனால் கோலி நன்றாக ஆடினால் அந்த போட்டி வேற லெவலில் இருக்கும். கோலி ஸ்கோர் செய்தால் இந்தியா ஜெயித்துவிடும். எனவே ஃபார்மில் இல்லாத கோலி ஃபார்முக்கு வருவது இந்தியாவிற்கு முக்கியம்.
கோலி ஃபார்மில் இல்லையென்றாலும், அவரை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று முன்னாள் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் அணியை எச்சரித்துவருகின்றனர். ஏற்கனவே சல்மான் பட் எச்சரித்திருந்த நிலையில், இப்போது யாசிர் ஷாவும் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள யாசிர் ஷா, “கோலியை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர் ஃபார்மில் இல்லை; ஸ்கோர் செய்ய திணறிக்கொண்டிருக்கிறர் என்பது உண்மை தான். ஆனால் அவர் உலத்தரம் வாய்ந்த தலைசிறந்த பேட்ஸ்மேன். எனவே எந்த நேரத்திலும் ஃபார்முக்கு வருவார்” என்று பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.