விராட் கோலி விரைவில் சதங்களை விளாசுவார் - ராகுல் டிராவிட் நம்பிக்கை!

Updated: Sun, Jan 02 2022 17:51 IST
Image Source: Google

சமகால கிரிக்கெட்டின்  தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தகர்த்துவந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக பெரிய ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகிறார்.

கடைசியாக 2019ம் ஆண்டு சதமடித்த விராட் கோலி, அதன்பின்னர் 2020 மற்றும் 2021 ஆகிய 2 ஆண்டுகளிலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து, இப்போதுதான் முதல் முறையாக தொடர்ச்சியாக 2 ஆண்டுகள், ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்திருக்கிறார்.

விராட் கோலி பெரிய ஸ்கோர் அடிக்காமல் அவுட்டாவதற்கு முக்கிய காரணம் செய்த தவறையே திரும்பத்திரும்ப செய்வதுதான். ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே ஆறாவது, ஏழாவது ஸ்டம்ப் லைனில் செல்லும் பந்துகளை கவர் டிரைவ் ஆடமுயன்றுதான் அவுட்டாகிறார். இங்கிலாந்து சுற்றுப்பயணம் முழுவதுமாக அப்படித்தான் அவுட்டானார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் ஆஃப் ஸ்டம்ப்புக்கு மிகவும் வெளியே சென்ற பந்தை விரட்டிச்சென்று அடித்து ஆட்டமிழந்தார்.

எனவே விராட் கோலி கவர் டிரைவ்களை கவனமாக பந்துகளை தேர்வு செய்து ஆட வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் அறிவுறுத்திவருகின்றனர். இந்நிலையில், விராட் கோலி விரைவில் பெரிய ஸ்கோர் செய்வார் என்று நம்பிக்கை தெரிவித்திருப்பதுடன், அவரது கேப்டன்சியையும் புகழ்ந்து பேசியுள்ளார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட், “இந்திய அணியின் மனவுறுதியை வலுப்படுத்தியுள்ளார். கோலி சிறப்பாக கேப்டன்சி செய்கிறார். பேட்டிங் பயிற்சியும் தீவிரமாக செய்துவருகிறார். போட்டி தொடங்கியதும், களத்தில் பயிற்சியாளரால் எதுவும் செய்யமுடியாது. கேப்டன் தான் அணியை வழிநடத்த வேண்டும். அதை விராட் கோலி மிகச்சிறப்பாக செய்துவருகிறார்.

விராட் கோலியுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. விராட் கோலி தீவிரமாக பயிற்சி செய்கிறார்; விரைவில் பெரிய ஸ்கோர் செய்வார்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை