IND vs ENG: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே, ரமந்தீப் சேர்ப்பு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று சென்னை எம்ஏ சிதம்பர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் நிதீஷ் ரெட்டி காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகி உள்ளார். மேலும் மற்றொரு நட்சத்திர வீரரான ரிங்கு சிங்கும் காயம் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து அவர்களுக்கான மாற்று வீரர்களாக ஷிவம் தூபே மற்றும் ரமந்தீப் சிங் ஆகியோர் இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்தவகையில் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இவர்கள் இருவரும் இந்திய அணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பயிற்சியின் போது இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவும் காயமடைந்ததாக கூறப்பட்டது. அதன்பின் இன்று நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் அவர் தனது உடற்தகுதியை நிரூபித்ததை அடுத்து இரண்டாவது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனிலும் இடம்பிடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங் (4&5 போட்டிக்கு மட்டும்), அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, ஷிவம் தூபே, ரமந்தீப் சிங்.