இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று துலீப் கோப்பை தொடர். அந்தவகையில் நடப்பாண்டு துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்சமயம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேற்கொண்டு இத்தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கே எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வய்ப்பு கிடைக்கும் என்பதால், இத்தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளன. 

Advertisement

அந்தவகையில் நேற்று தொடங்கிய இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா சி மற்றும் இந்தியா டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா சி அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா டி அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்ஸர் படேல் அரைசதம் கடந்ததுடன் 86 ரன்களைச் சேர்த்திருந்தார்..

Advertisement

இதன்மூலம் இந்தியா டி அணியானது முதல் இன்னிங்ஸில் 164 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா சி அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களிலும், சாய் சுதர்ஷன் 7 ரன்களிலும், ஆர்யன் ஜூரெல், ராஜத் பட்டிதார் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

இதனால் அந்த அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 91 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை பாபா இந்திரஜித் - அபிஷேக் போரல் ஆகியோர் தொடர்ந்தனர். இதில் சிறப்பாக விளையாடிய இந்திரஜித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில் 72 ரன்களிலும், அபிஷேக் போரல் 34 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

இதனால் இந்தியா சி அணியும் 168 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. பின்னர் 4 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா டி அணியில்  அதர்வா டைடே, யாஷ் தூபே ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர் - தேவ்தத் படிக்கல் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்தன்ர். பின்னர் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரும், 56 ரன்களில் தேவ்தத் படிக்கலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து நிதானமாக விளையாடிய ரிக்கி புய் 44 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ஸ்ரீகர் பரத், சர்ன்ஷ் ஜைன், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

Advertisement

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா டி அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் அக்ஸர் படேல் 11 ரன்களுடனும், ஹர்ஷித் ரானா 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா சி அணியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மனவ் சுதர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து 202 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா டி அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News