பொல்லார்டை மும்பை அணி எடுக்க இவர் தான் காரணமா? - இப்படி பண்ணிட்டிங்களே சாம்பியன்!
மும்பை இந்தியன்ஸ் அணியில் பல வீரர்கள் விளையாடி இருந்தாலும், ஆரம்ப கட்டத்தில் இருந்து தற்போது வரை ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரர் வெகுசிலரே. அந்த வகையில் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த அதிரடி வீரரான பொல்லார்ட் ஐபிஎல் தொடரில் அறிமுகமானதிலிருந்து மும்பை அணியில் மட்டுமே விளையாடி வருகிறார்.
பல ஆண்டுகளாக மும்பை அணி பெற்ற சில பிரம்மாண்டமான வெற்றிகளுக்கு காரணமாக இருந்துள்ளார். 14வது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிராக வெற்றிக்கு சாத்தியமே இல்லாத ஒரு போட்டியை தனது அசுர பேட்டிங்கின் மூலம் மும்பை அணிக்கு வெற்றியை தேடித்தந்து, தான் எவ்வளவு அபாயகரமான பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பொல்லார்ட் எப்படி மும்பை அணிக்கு தேர்வான என்பது குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரர் ட்வைன் பிராவோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய பிரவோ,“மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகிய போது என்னுடைய இடத்திற்கான மாற்று வீரரை மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த ஒருவர் தான் நிரப்ப வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் என்னிடம் கேட்டுக் கொண்டனர். அப்போதுதான் நான் பொல்லார்ட்டின் பெயரை பரிந்துரைத்தேன்.
உடனே அவர்கள் பொல்லார்டை தொடர்பு கொண்டார்கள். அப்போது உள்ளூர் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தார். மேலும் சாம்பியன்ஸ் லீக் தொடருக்காக ஹைதராபாத் வந்திருந்த போது நான் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு சாம்பியன்ஸ் லீக் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே நீங்கள் பொல்லார்டை ஒப்பந்தம் செய்து விடுங்கள் என்று கூறினேன்.
பிறகு பொல்லார்ட் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. அந்த சந்திப்பிற்கு பிறகு பொல்லார்ட் மும்பை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் பொல்லார்டை எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் போட்டிபோட இறுதியில் மும்பை அணி பொல்லார்டை வாங்கியது என்று தெரிவித்தார்.