தனது செயலால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற எல்லிஸ் பெர்ரி!

Updated: Wed, Mar 15 2023 17:15 IST
Ellyse Perry on cleaning RCB dugout! (Image Source: Google)

மகளிர் பிரீமியர் லீக்கின் முதலாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபையர் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியது. அதேசமயம் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. 

இந்நிலையில் ஆர்சிபி அணி வீராங்கனை ஒருவரின் செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. 32 வயதான இந்த ஆஸ்திரேலிய வீராங்கனை தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 195 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 அரை சதங்கள் அடங்கும். 21 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகளில் இரண்டாவது இடத்தில் அவர் உள்ளார்.

ஆர்சிபி அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இருந்தாலும் தனது உன்னத செயலால் ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளார் பெர்ரி. போட்டி முடிந்ததும் தனது அணியின் டக்-அவுட்டில் இருக்கும் வாட்டர் பாட்டில் மற்றும் கழிவுகளை அகற்றுகிறார் அவர். அந்தப் படங்களை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் வைரலாக பரப்பி வருகின்றன. 

இதுகுறித்து பேசிய அவர், “இதை நான் மட்டும்தான் செய்கிறேன் என சொல்ல மாட்டேன். களத்தில் நமக்காகவே ஒவ்வொன்றும் செய்யப்படுகிறது. ஒருவகையில் இதனை நாம் விளையாடும் இடத்திற்கு தரும் மரியாதை என்றும் சொல்லலாம்” என அவர் தெரிவித்துள்ளார். யூபி வாரியர்ஸ் அணியுடன் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை ஆர்சிபி அணியால் உயிர்ப்போடு வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை