அபிஷேக் சர்மாவை சீண்டிய சுஃபியான் முகீம்-வைரலாகும் காணொளி!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இந்திய ஏ அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் திலக் வர்மா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் சுபியான் முகீம் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து பாகிஸ்தான் அணியானது இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணி வீரர் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை கைப்பற்றிய பாகிஸ்தானின் சுஃபியான் முகீமின் கொண்டாட்டம் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன்படி இந்திய அணியின் பேட்டிங்கின் ஏழாவது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. சுழற்பந்து வீச்சாளர் முகீம் பாகிஸ்தான் தரப்பில் ஏழாவது ஓவரை வீசினார்.
அப்போது அந்த ஓவரின் முதல் பந்தை அபிஷேக் சர்மா சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தூக்கி அடித்த நிலையில், பந்து அவர் எதிர்பார்த்தது போல் பேட்டில் படாததால், காசிம் அக்ரமிடம் கேட்ச் கொடுத்தார். இதனால் இப்போட்டியில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 35 ரன்களைச் சேர்த்த கையோடு பெவிலியன் திரும்பிய அபிஷேக் சர்மாவை சுஃபியான் அக்கீம் வழியனுப்பும் வகையில், அவரை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டி சில மோசமான வார்த்தைகளையும் கூறினார்.
Also Read: Funding To Save Test Cricket
இதைத் தொடர்ந்து, அபிஷேக் நின்று கோபமாக அவரைப் பார்த்தார், அவர் எதுவும் சொல்லும் முன், நடுவர் தலையிட்டு அபிஷேக் சர்மாவை பெவிலியன் திரும்பும் படி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனாலும் அபிஷேக் சர்மா பெவிலியன் திரும்பிய போது, முகீமிடம் சில மோசமான வார்த்தைகளையும் கூறினார். இந்நிலையில் இருவருக்கும் இடையேயான இந்த வார்த்தை மோதல் குறித்த காணொளியானது தற்சமயம் வைரலாகி வருகிறது.