52 பந்துகளில் சதம் விளாசி சாதனைகளை குவித்த வைபவ் சூர்யவன்ஷி!

Updated: Sat, Jul 05 2025 19:08 IST
Image Source: Google

EN-U19 vs IN-U19, 4th ODI: இங்கிலாந்து அண்டர்19 அணிக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி சதமடித்து அசத்தியதுடன் 143 ரன்களைச் சேர்த்து அசத்தியுள்ளார். 

இந்திய அண்டர்19 அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது வொர்செஸ்டரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 51 பந்துகளில் சதமடித்தும் மிரட்டினார். மேற்கொண்டு இப்போட்டியில் 78 பந்துகளை எதிர்கொண்ட அவர் 13 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் என 143 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் வைபவ் சூர்யவன்ஷி தனது பெயரில் சில சாதனைகளையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். 

அந்தவகையில் இப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 52 பந்துகளில் சதமடித்ததன் மூலம் இளையோர் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரர் எனும் உலக சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக பாகிஸ்தானின் காம்ரன் குலாம் 53 பந்துகளில் சதமடித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்த நிலையில், இன்றைய போட்டியின் மூலம் வைபவ் சூர்யவன்ஷி அந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். 

இதுதவிர்த்து இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் இளையோர் கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் சதமடித்த இந்திய வீரர் எனும் சர்ஃப்ராஸ் கானின் சாதனையையும் வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். முன்னதாக சர்ஃப்ராஸ் கான் 15 வயது 338 நாள்களில் சதமடித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் வைபவ் சூர்யவன்ஷி 14 வயது 100 நாள்களில் சதமடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

Also Read: LIVE Cricket Score

அதேசமயம் உலகளவிலும் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் எனும் நஜ்முல் ஹொசைன் சாண்டோவின் சாதனையையும் முறியடித்து புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் வங்கதேச அணியின் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 14 வயது 241 நாள்களில் சதமடித்ததே சாதனையாக இருந்து குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை