சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை இழக்கிறதா இங்கிலாந்து?
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரையிறுதி வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அத்துடன் கத்துக்குட்டியாக கருதப்படும் நெதர்லாந்து வலுவான தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து வங்கதேசத்தையும் வீழ்த்தி அசத்தியது. அதே போல ஆஃப்கானிஸ்தான் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும், பாகிஸ்தானையும் தோற்கடித்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி சாதனைகளை படைத்தது. மேலும் 5 கோப்பைகளை வென்ற வெற்றிகரமான அணி ஆஸ்திரேலியா ஆரம்பகட்ட தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும் அதன் பின் 4 தொடர் வெற்றிகளை பதிவு செய்து டாப் 4 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.
ஆனால் அனைத்து அணிகளையும் அடித்து நொறுக்குமென்று எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 6 போட்டிகளில் 5 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியல் 10ஆவது இடத்தை வலுவாக பிடித்துள்ளது. குறிப்பாக ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக தோற்ற அணி பலவீனமான இலங்கையிடமும் 156 ரன்கள் சுருண்டு படுதோல்வி சந்தித்தது.
அந்த நிலைமையில் இந்தியாவுக்கு எதிராகவும் மோசமாக செயல்பட்ட அந்த அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளதால் லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் கோப்பை இங்கிலாந்து விளையாடுவதும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஆம் மினி உலகக்கோப்பை என்ற ரசிகர்களால் கொண்டாடப்படும் சாம்பியன்ஸ் கோப்பை 2017க்குப்பின் மீண்டும் 2025 மற்றும் 2029 ஆகிய வருடங்களில் நடத்துவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது.
அதில் வரும் 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பையில் மொத்தம் உலகின் டாப் 8 அணிகள் களமிறங்க உள்ளன. மேலும் அத்தொடரில் நடத்துவதால் பாகிஸ்தான் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இருப்பினும் எஞ்சிய 7 இடங்களுக்கு தற்போது நடைபெற்று வரும் 2023 உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானை தவிர்த்து டாப் 7 இடங்களை பிடிக்கும் அணிகளே தேர்வு செய்யப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
அந்த சூழ்நிலையில் தற்போது 10ஆவது இடத்தில் இருப்பதால் இங்கிலாந்து சாம்பியன்ஸ் கோப்பை விளையாடுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்த 3 போட்டிகளில் வென்று எப்படியாவது லீக் சுற்றும் முடிவதற்குள் புள்ளி பட்டியலில் டாப் 7 இடத்துக்குள் சென்றால் மட்டுமே இங்கிலாந்து 2025 சாம்பியன்ஸ் விளையாட முடியும். இல்லையெனில் 2023 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடாததை போல் அத்தொடரில் இங்கிலாந்து விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.