ENG vs IND, 1st Test, Tea: ஜோ ரூட் அரைசதம்; பந்துவீச்சாளர்கள் அசத்தல்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதல் நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு, ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முகமது ஷமி வேகத்தில் டொமினிக் சிப்லி 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு கேப்டன் ரூட்டுடன் இணைந்து ஜானி பேர்ஸ்டோவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், தேநீர் இடைவேளை வரை விக்கெட் விழாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
ரூட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்றுமொரு அரைசதத்தை எட்டினார். இந்த நிலையில் ஷமி பந்துவீச்சில் பேர்ஸ்டோவ் (29 ரன்கள்) ஆட்டமிழந்தார்.
ரூட் - பேர்ஸ்டோவ் இணை 4-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது. பேர்ஸ்டோவ் விக்கெட் விழுந்தவுடன் தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டது. தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், ஜாஸ்பிரீத் பூம்ரா மற்றும் முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.