ENG vs IND, 2nd Test: மளமளவென சரிந்த விக்கெட்டுகள்; தடுமாறும் இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் அடித்திருந்தது.
இதில் கே.எல்.ராகில்127 ரன்களுடனும் ரஹானே ஒரு ரன்னுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ராபின்சன் இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் அடித்த ராகுல், அடுத்த பந்தை கவர் டிரைவ் ஆடி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இன்றும் பெரிய இன்னிங்ஸ் ஆடி பெரிதாக ஸ்கோர் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் இன்றைய ஆட்டத்தின் 2வது பந்திலேயே 129 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதற்கடுத்த ஓவரிலேயே ஆண்டர்சனின் பந்தில் ரஹானே வெறும் ஒரு ரன்னில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பிறகு வந்த ரிஷப் பந்த், ஜடேஜாவுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.
பின் அவரும் 37 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஷமியும் ரன் ஏதுமின்றி வெளியேறினார். இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 346 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணியின் தரப்பில் ஜடேஜா 31 ரன்கலுடனும், இஷாந்த் சர்மா ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், ஒல்லி ராபின்சன் 2 விக்கெட்டுகளையும், மார்க் வுட், மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.