இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. 3ஆம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. ரூட் 89, ஜானி பேர்ஸ்டோவ் 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு சிறிது நேரத்திலேயே பேர்ஸ்டோவ் 57 ரன்களுக்கு முகமது சிராஜ் வேகத்தில் ஆட்டமிழந்தார். ஆனால், ரூட் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
ஜாஸ்பிரீத் பூம்ரா வீசிய 82ஆவது ஓவரில் 1 ரன் எடுத்த அவர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 22ஆவது சதத்தைப் பதிவு செய்தார். லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் இவருக்கு இது 4ஆவது சதம்.
இதன் மூலம் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 314 ரன்களை எடுத்துள்ளது. இதில் ஜோ ரூட் 132 ரன்களுடனும், மொயீன் அலி 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி, இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இந்த இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 50 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.