இந்தியா - இங்கிலாந்து இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் அடித்தது.

Advertisement

99 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் அபார சதம்(127), புஜாரா(61), ராகுல்(46), விராட் கோலி(44) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங் மற்றும் பின்வரிசையில் ஷர்துல் தாகூர்(60) மற்றும் ரிஷப் பண்ட்டின் அதிரடி அரைசதத்தால்(50) 2வது இன்னிங்ஸில் 466 ரன்களை குவித்தது. உமேஷ் யாதவ்(25) மற்றும் பும்ரா(24) ஆகிய இருவரும் பங்களிப்பு செய்தனர்.

Advertisement

இதன் மூலம் இந்திய அணி 367 ரன்கள் முன்னிலை பெற்றது. அதன்பின் 368 ரன்கள் என்ற கடின இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது. 4ஆம் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் 2வது இன்னிங்ஸில் இலக்கை விரட்ட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத் ஆகிய இருவரும் 4ம் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட்டை இழக்கவில்லை. 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி 77 ரன்கள் அடித்திருந்தது.

கடைசி நாளான இன்றைய ஆட்டத்திலும் இருவரும் நன்றாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 100 ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அரைசதம் அடித்த ரோரி பர்ன்ஸ் 50 ரன்களில் ஷர்துல் தாகூரின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அவர் 41வது ஓவரில் ஆட்டமிழந்த நிலையில், ஜடேஜா வீசிய 48வது ஓவரின் 5வது பந்தில் மிட் ஆன் திசையில் ஹசீப் ஹமீத் கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்த கேட்ச்சை முகமது சிராஜ் தவறவிட்டார். நன்கு செட்டில் ஆகியிருந்த ரோரி பர்ன்ஸ் விக்கெட் விழுந்துவிட்ட நிலையில், களத்தில் நன்கு செட்டில் ஆகியிருந்த மற்றொரு வீரரான ஹசீப் ஹமீதின் கேட்ச்சை சிராஜ் பிடித்திருந்தால், அவரும் நடையை கட்டியிருப்பார். அடுத்தடுத்து களத்திற்கு வரும் இங்கிலாந்து வீரர்களை வீழ்த்த வேண்டிய இந்திய பவுலர்களின் வேலை எளிதாகியிருக்கும். ஆனால் சிராஜ் கேட்ச்சை விட்டதால், ஹமீத் தொடர்ந்து களத்தில் நீடிக்கிறார்.

ஆனால் 3ஆம் வரிசையில் இறங்கிய டேவிட் மலான், 5 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். கடைசி நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் அடித்துள்ளது. ஹசீப் ஹமீத்  62 ரன்களுடனும் ஜோ ரூட் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கடைசி 2 செசனில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 237 ரன்களும், இந்திய அணியின் வெற்றிக்கு 8 விக்கெட்டுகளும் தேவை.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News