ENG vs IND, 3rd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் ஆடிய அதே வீரர்களைக் கொண்டு இந்திய அணி இப்போட்டியில் களம் கண்டது.
அதன் படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல், முதல் ஓவரிலேயே ஆண்டர்சனின் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். முதல் 2 போட்டிகளில் நன்றாக பேட்டிங் ஆடிய ராகுல், இந்த போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து களத்திற்கு வந்த புஜாராவும் ஆண்டர்சனின் பந்தில் வெறும் ஒரு ரன்னுக்கு அவுட்டாகி வெளியேறினார். 4 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துவிட்ட நிலையில், 3வது விக்கெட்டுக்கு ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த கோலி நன்றாக ஆரம்பித்தார். ஆனாலும் அவரை களத்தில் நிலைக்க அனுமதிக்காமல் தனது முதல் ஸ்பெல்லிலேயே கோலியின்(7) விக்கெட்டையும் வீழ்த்தி மிரட்டினார் ஆண்டர்சன்.
இதையடுத்து ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த ரஹானே, அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஒரு மணி நேரம் நன்றாக விளையாடினார். இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடிவந்த நிலையில், உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி ஓவரில் ராபின்சனின் பந்தில் ராஹானே 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
ரஹானே அவுட்டானதையடுத்து, 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் உள்ளது இந்திய அணி. அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு, 2வது செஷனில் ரோஹித்துடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதனால் இந்திய அணி 58 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், கிரேக் ஓவர்டன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.