ENG vs IND, 3rd Test: இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி; தொடரை சமன் படுத்தியது இங்கிலாந்து!

Updated: Sat, Aug 28 2021 17:39 IST
Image Source: Google

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 40.4 ஓவர்களில் 78 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து 432 ரன்கள் குவித்தது. 

இதையடுத்து, 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நிதானமாக ஆடியது. துவக்க வீரர் கே.எல்.ராகுல் 8 ரன்னில் அவுட்டான நிலையில், அடுத்து இறங்கிய புஜாரா, ரோகித்துடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார். ரோகித்-புஜாரா ஜோடி 82 ரன்கள் சேர்த்தது. அரை சதம் கடந்த ரோகித் 59 ரன்னில் அவுட்டானார். 

அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும், பொறுமையுடன் ஆடினார். அத்துடன், மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். இதனால், மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 91 ரன்னுடனும், விராட் கோலி 45 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

அதன்பின் இன்று நான்காம் நாள் ஆட்டத்தின்போது, இங்கிலாந்து பவுலர்கள் புதிய பந்தை பயன்படுத்தினர். ஆடுகளமும் சற்று ஈரப்பதமாக இருந்ததால் பந்து தாருமாறாக ஸ்விங் ஆனது. எனவே, பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறினர். புஜாரா மேற்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் 91 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, ரகானே 10 ரன்கள், ரிஷப் பண்ட் 1 ரன், ஷமி 6 ரன், இஷாந்த் சர்மா 2 ரன் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய  ஜடேஜா 24 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்தார். கடைசி விக்கெட்டான சிராஜ், வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப,  278 ரன்களில் இந்தியா ஆல் அவுட் ஆனது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. 

இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஓவர்டன் 3 விக்கெட் எடுத்தார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை1-1 என சமநிலையில் உள்ளது. 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

மேலும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி லண்டனில் தொடங்க உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை