ENG vs IND : டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த ஜடேஜா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி நாட்டிங்காம் நகரின் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 183 ரன்களை இங்கிலாந்து அணி குவித்தது.
இப்போட்டியில் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இப்போட்டியில் ஜடேஜா அரைசதம் அடித்தது மட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக மிகப்பெரிய சாதனை ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளார்.
அந்த சாதனை யாதெனில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிவை சந்தித்து இருந்தபோது களமிறங்கிய ஜடேஜா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இந்த இன்னிங்சில் 27 ரன்களை கடந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 ஆயிரம் ரன்களை கடந்தார். அதுமட்டுமின்றி ஏற்கனவே அவர் 200 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் குவித்தது மட்டுமின்றி 200 விக்கெட்டுகளையும் வீழ்த்திய 21வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த சராசரியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற மிகப்பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது.