டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் மோசமான சாதனை!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தனது முதல் நாள் ஆட்ட நேரத்திற்கு முன்பாகவே 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 21 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி முதல் நாளை முடித்திருந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளை ஆரம்பித்த இந்திய அணி ரோஹித் - ராகுல் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் காரணமாக மிகச் சிறப்பான துவக்கத்தை பெற்றது.
பின் 38ஆவது ஓவரில் போது இந்த ஜோடி பிரிந்தது. தொடக்க வீரரான ரோகித் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி 97 ரன்கள் எடுத்திருந்த போதுதான் முதல் விக்கெட்டை இழந்தது. ஆனால் அதன் பின்னர் களமிறங்கிய புஜாரா , கேப்டன் விராட் கோலி ஆகியோர் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்குத் திரும்பி ஏமாற்றினர். அதிலும் விராட் கோலி சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்த போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் மோசமான சாதனையை முறியடித்துள்ளார். அந்த சாதனை யாதெனில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9வது முறையாக கோலி தற்போது டக் அவுட் ஆகி உள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் கேப்டனாக தோனி எட்டு முறை டெஸ்ட் போட்டிகளில் டக் அவுட் ஆகியிருந்தார். அதனை தற்போது கேப்டனாக விராட் கோலி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.