ENG v IRE, Only Test: அயர்லாந்தை கட்டுப்படுத்திய பிராட்; அதிரடி காட்டும் இங்கிலாந்து!
ஐபிஎல் தொடர் முடிவடைந்த அடுத்த 2 நாட்களில் இங்கிலாந்து அணிக்கான கிரிக்கெட் சீசன் தொடங்கியுள்ளது. ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 7ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் இன்று அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி ஸ்டூவர்ட் பிராடின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன் மூலம் ஸ்டூவர்ட் பிராட் 581 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டூவர்ட் பிராட் 20வது முறையாக ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஏற்கனவே இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 700 விக்கெட்டுகளை வீழ்த்த காத்திருக்கும் நிலையில், ஆஷஸ் தொடர் முடிவதற்குள் பிராட் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை வழக்கம்போல அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸாக் கிரௌலி அரைசதம் கடந்த கையோடு 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின் டக்கெட்டுடன் இணைந்த ஒல்லி போப்பும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் பென் டக்கெட்டும் அரைசதம் கடந்தார்.
இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பென் டக்கெட் 60 ரன்களிலும், ஒல்லி போப் 29 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 20 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.